நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 154

மு.வரதராசனார் உரை

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

கலைஞர் உரை

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா உரை

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

வ சுப மாணிக்கம் உரை

பெருந்தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுக்குந் தன்மையைப் போற்றிக் கொள்க.

மணக்குடவர் உரை

தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.

பரிமேலழகர் உரை

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.).

English

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.

G.U. Pope’s Translation

Seek’st thou honor never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain.

மொத்த சொற்கள்: 132

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.