பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 152

மு.வரதராசனார் உரை

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

கலைஞர் உரை

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

இரா சாரங்கபாணி உரை

நெறிகடந்து செய்யும் குற்றத்தை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க. அங்ஙனம் பொறுத்தலினும் அக்குற்றத்தைச் செய்த அப்போதே மறத்தல் நல்லது.

மணக்குடவர் உரை

பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

பரிமேலழகர் உரை

என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. (‘மிகை’ என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை ‘அதனினும் நன்று’ என்றார்).

English

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

G.U. Pope’s Translation

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;.

மொத்த சொற்கள்: 146

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.