மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 158

மு.வரதராசனார் உரை

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்

கலைஞர் உரை

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

சாலமன் பாப்பையா உரை

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

தேவநேயப்பாவாணர் உரை

செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை தாம் தம் பொறையினால் வென்று விடுக. சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் ‘தகுதியான் வென்று விடல்’ என்றார். ‘விடல்’ வியங்கோள் வினை.

மணக்குடவர் உரை

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

பரிமேலழகர் உரை

மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)

English

Let a man by patience overcome those who through pride commit excesses.

G.U. Pope’s Translation

With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.

மொத்த சொற்கள்: 156

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.