நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள்: 124

மு.வரதராசனார் உரை

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

கலைஞர் உரை

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

இரா இளங்குமரனார் உரை

கால இட நிலைகளுக்குத் தக்கவாறு அசையாத அடக்கத்தை உடையவனது உயர்வு, தன்னியற்கையால் உயர்ந்து தோன்றும் மலையினும் மிக உயர்ந்தது.

மணக்குடவர் உரை

தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.

பரிமேலழகர் உரை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். ‘மலை’ ஆகுபெயர்.).

English

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.

G.U. Pope’s Translation

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view

மொத்த சொற்கள்: 145

முந்தைய குறள் அடுத்த குறள்

13. அடக்கமுடைமை பிற குறள்கள்

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை

125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்

பல நல்ல சொற்களையே சொல்லியிருந்தும் அவற்றில் ஒன்றாயினும் தீய சொல்லாய் அதன் தீய பொருட்பயன் உண்டாகுமானால் மற்ற நல்ல சொற்களின் நன்மையும் கெட்டுவிடும்.

129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.