ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

பல நல்ல சொற்களையே சொல்லியிருந்தும் அவற்றில் ஒன்றாயினும் தீய சொல்லாய் அதன் தீய பொருட்பயன் உண்டாகுமானால் மற்ற நல்ல சொற்களின் நன்மையும் கெட்டுவிடும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள்: 128

மு.வரதராசனார் உரை

பல நல்ல சொற்களையே சொல்லியிருந்தும் அவற்றில் ஒன்றாயினும் தீய சொல்லாய் அதன் தீய பொருட்பயன் உண்டாகுமானால் மற்ற நல்ல சொற்களின் நன்மையும் கெட்டுவிடும்.

கலைஞர் உரை

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

சாரங்கபாணி உரை

ஒரு சொல்லே ஆயினும் பொருளால் பிறர்க்குத் துன்பம் உண்டாகுமாறு ஒருவன் சொல்லுவானாயின், அது நாவடக்கமின்மையைக் காட்டிவிடும்.

மணக்குடவர் உரை

ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

பரிமேலழகர் உரை

தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்¢களின் கண்ணே ஒன்றாயினும் ‘தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்’ என்று உரைப்பாரும் உளர்.)

English

If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

G.U. Pope’s Translation

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing.

மொத்த சொற்கள்: 185

முந்தைய குறள் அடுத்த குறள்

13. அடக்கமுடைமை பிற குறள்கள்

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை

125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.