வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 9. விருந்தோம்பல்
குறள்: 83

மு.வரதராசனார் உரை

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

கலைஞர் உரை

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

இரா இளங்குமரனார் உரை

நாள்தோறும் தன்னிடத்து வரும் விருந்தினரைப் பேணுபவன் இல்வாழ்க்கை அவ்விருந்து செய்தல் வழியால் துன்புற்றுக் கெட்டுப் போவதில்லை.

மணக்குடவர் உரை

நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

பரிமேலழகர் உரை

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).

English

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

G.U. Pope’s Translation

Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share.

மொத்த சொற்கள்: 132

முந்தைய குறள் அடுத்த குறள்

9. விருந்தோம்பல் பிற குறள்கள்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

87. இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தின் அளவினதாகும்.

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.