தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 7. மக்கட்பேறு
குறள்: 63

மு.வரதராசனார் உரை

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

கலைஞர் உரை

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

சாலமன் பாப்பையா உரை

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

வீ. முனிசாமி உரை

தம் மக்களைத் தம்முடைய பொருள் என்று அறிந்தோர் கூறுவர். மக்களாகிய அப்பொருள் அவரவர்கள் செய்த வினைப்பயனால் உண்டாவதாகும்

மணக்குடவர் உரை

தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.

பரிமேலழகர் உரை

தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். (‘தம்தம் வினை’ என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, ‘முருகனது குறிஞ்சிநிலம்’ என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் ‘பொருள்’ என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

English

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

G.U. Pope’s Translation

‘Man’s children are his fortune,’ say the wise; From each one’s deeds his varied fortunes rise.

மொத்த சொற்கள்: 176

முந்தைய குறள் அடுத்த குறள்

7. மக்கட்பேறு பிற குறள்கள்

62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.