எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 7. மக்கட்பேறு
குறள்: 62

மு.வரதராசனார் உரை

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

கலைஞர் உரை

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

சாலமன் பாப்பையா உரை

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

சுப மாணிக்கம் உரை

பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா.

மணக்குடவர் உரை

எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

பரிமேலழகர் உரை

எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். (‘அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்’ என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: ‘ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து’ தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், ‘பண்பு’ என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)

English

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

G.U. Pope’s Translation

Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev’n-fold maze of birth.

மொத்த சொற்கள்: 189

முந்தைய குறள் அடுத்த குறள்

7. மக்கட்பேறு பிற குறள்கள்

63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.