மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணைநலம்
குறள்: 60

மு.வரதராசனார் உரை

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

கலைஞர் உரை

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

சி இலக்குவனார் உரை

இல்லறத்தின் பெருமையே ஒருவனுக்கு நன்மை தருவது. அவ்வில்லறத்தின் அணிகலன் போன்றது நல்ல மக்களைப் பெறுதல்.

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரை

மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. (‘அறிந்தோர்’ என்பது எஞ்சி நின்றது. ‘மற்று’ அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

English

The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.

G.U. Pope’s Translation

The house’s ‘blessing’, men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

மொத்த சொற்கள்: 161

முந்தைய குறள் அடுத்த குறள்

6. வாழ்க்கைத் துணைநலம் பிற குறள்கள்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.