பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணைநலம்
குறள்: 58

மு.வரதராசனார் உரை

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

கலைஞர் உரை

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

தமிழண்ணல் உரை

தன்னைத் தனக்குரிய மனைவியாகப் பெற்ற கணவனை, தான் தனக்குரிய கணவனாகவும் பெற்று இணைந்து வாழும் வாழ்வு பெற்றால், அப்பெண்டிர் இவ்வுலகில் மட்டுமன்று, தேவர்கள் வாழும் உலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர். உரியராகப் பெறுதல் அத்துணை ஒருவருக்கொருவர் உறவுரிமையுடயராதல். இங்கு மட்டுமென்ன; தேவருலகிலும் சிறப்புண்டாகும் என்ற உலகியல் நடை இது.

மணக்குடவர் உரை

பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை

பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

English

If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

G.U. Pope’s Translation

If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.

மொத்த சொற்கள்: 173

முந்தைய குறள் அடுத்த குறள்

6. வாழ்க்கைத் துணைநலம் பிற குறள்கள்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.