சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணைநலம்
குறள்: 57

மு.வரதராசனார் உரை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

கலைஞர் உரை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

இரா சாரங்கபாணி உரை

பெண்கள் தம்மை நிறையால் காக்கும் காவலே தலை சிறந்த காவல். அவர்களைச் சிறையால் காப்பது என்ன பயனைத் தரும்?

மணக்குடவர் உரை

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்

பரிமேலழகர் உரை

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், ‘நிறைகாக்கும் காப்பே தலை’ என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

English

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

G.U. Pope’s Translation

Of what avail is watch and ward? Honour’s woman’s safest guard.

மொத்த சொற்கள்: 175

முந்தைய குறள் அடுத்த குறள்

6. வாழ்க்கைத் துணைநலம் பிற குறள்கள்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.