பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணைநலம்
குறள்: 54

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

கலைஞர் உரை

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.

சாலமன் பாப்பையா உரை

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

வ சுப மாணிக்கம் உரை

கற்புத் திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா?

மணக்குடவர் உரை

பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை

பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் ‘யாஉள’ என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

English

What is more excellent than a wife, if she possess the stability of chastity?

G.U. Pope’s Translation

If woman might of chastity retain, What choicer treasure doth the world contain?.

மொத்த சொற்கள்: 133

முந்தைய குறள் அடுத்த குறள்

6. வாழ்க்கைத் துணைநலம் பிற குறள்கள்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.