மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணைநலம்
குறள்: 52

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

கலைஞர் உரை

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

இரா சாரங்கபாணி உரை

இல்லறத்துக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடின், அவ்வில்லறம் வேறுவகையில் எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் சிறப்பில்லை.

மணக்குடவர் உரை

குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர் உரை

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. (‘இல்’ என்றார் பயன்படாமையின்.).

English

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

G.U. Pope’s Translation

If household excellence be wanting in the wife, Howe’er with splendour lived, all worthless is the life.

மொத்த சொற்கள்: 132

முந்தைய குறள் அடுத்த குறள்

6. வாழ்க்கைத் துணைநலம் பிற குறள்கள்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.