ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 5. இல்வாழ்க்கை
குறள்: 48

மு.வரதராசனார் உரை

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

கலைஞர் உரை

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

வ சுப மாணிக்கம் உரை

பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது.

மணக்குடவர் உரை

பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

பரிமேலழகர் உரை

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் ‘ஆற்றின் ஒழுக்கி’ என்றார். ‘நோற்பார்’ என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், ‘நோற்பாரின் நோன்மையுடைத்து’ என்றார்.).

English

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

G.U. Pope’s Translation

Others it sets upon their way, itself from virtue ne’er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.

மொத்த சொற்கள்: 172

முந்தைய குறள் அடுத்த குறள்

5. இல்வாழ்க்கை பிற குறள்கள்

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.