அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 5. இல்வாழ்க்கை
குறள்: 46

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

கலைஞர் உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை

ஒருவன் தனது இல்வாழ்க்கையை அறவழியிலே நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் யாதோ? (செவ்விய இல்வாழ்க்கையே எல்லாப் பயனையும் கொடுக்கும் என்பது கருத்து.)

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

பரிமேலழகர் உரை

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? (‘அறத்தாறு’ என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. ‘புறத்தாறு’ இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).

English

What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?

G.U. Pope’s Translation

If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?

மொத்த சொற்கள்: 183

முந்தைய குறள் அடுத்த குறள்

5. இல்வாழ்க்கை பிற குறள்கள்

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.