ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 2. வான் சிறப்பு
குறள்: 14

மு.வரதராசனார் உரை

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

கலைஞர் உரை

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

சாலமன் பாப்பையா உரை

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

வீ. முனிசாமி உரை:

மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.

மணக்குடவர் உரை

ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழுவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை

உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். (‘குன்றியக்கால்’ என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

English

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

G.U. Pope’s Translation

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain

மொத்த சொற்கள்: 129

முந்தைய குறள் அடுத்த குறள்

2. வான் சிறப்பு பிற குறள்கள்

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.