விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 2. வான் சிறப்பு
குறள்: 13

மு.வரதராசனார் உரை

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

கலைஞர் உரை

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

சாலமன் பாப்பையா உரை

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

குன்றக்குடி அடிகளார் உரை

வான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைவு இல்லை. அதனால் பஞ்சமும் பசியும் உலகத்தை வருத்தும். ‘விரிநீர் வியனுலகம்’ என்றது தண்ணீர்ப் பரப்பளவில் மிகுந்திருந்தும் பயன்படாத நிலை உணர்த்தப்பட்டது. உப்புநீர் விளைவிக்கப் பயன்படாது. பயன்படாத பொருளும் உதவ இயலாத படையும் இருந்து என்ன பயன்?

மணக்குடவர் உரை

வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை

விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், ‘விரி நீர் வியன் உலகத்து’ என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.).

English

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

G.U. Pope’s Translation

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain

மொத்த சொற்கள்: 196

முந்தைய குறள் அடுத்த குறள்

2. வான் சிறப்பு பிற குறள்கள்

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.