ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: புறங்கூறாமை
குறள்: 190

மு.வரதராசனார் உரை

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.

கலைஞர் உரை

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

குன்றக்குடி அடிகளார் உரை

புறம்கூறுபவர் அயலார் குற்றமறிந்து சொல்வது போலத் தம்முடைய குற்றங்களையும் (புறங்கூறல் உள்பட) கண்டு திருந்தி ஒழுகுவாராயின் உயிர்களுக்குத் தீங்கு உண்டோ?

மணக்குடவர் உரை

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ? [நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, ‘காண்கிற்பின்’ என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, ‘உயிர்க்குத் தீது உண்டோ’ என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

English

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?

G.U. Pope’s Translation

If each his own, as neighbors' faults would scan, Could any evil hap to living man?

மொத்த சொற்கள்: 178

முந்தைய குறள் அடுத்த குறள்

புறங்கூறாமை பிற குறள்கள்

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?