துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: புறங்கூறாமை
குறள்: 188

மு.வரதராசனார் உரை

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

கலைஞர் உரை

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?.

சாலமன் பாப்பையா உரை

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

குன்றக்குடி அடிகளார் உரை

மணக்குடவர் உரை

தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.

பரிமேலழகர் உரை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? (‘தூற்றுதல்’ பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், ‘என்னைகொல்’ என்றார். ‘செய்வது என்பது சொல்லெச்சம்’. ‘என்னர் கொல்’ என்று பாடம் ஓதி, ‘எவ்வியல்பினராவர்’ என்று உரைப்பாரும் உளர்.).

English

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends?

G.U. Pope’s Translation

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men’s good name?

மொத்த சொற்கள்: 151

முந்தைய குறள் அடுத்த குறள்

புறங்கூறாமை பிற குறள்கள்

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?