பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: புறங்கூறாமை
குறள்: 187

மு.வரதராசனார் உரை

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

கலைஞர் உரை

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

தமிழண்ணல் உரை

சிரித்து மகிழுமாறு பேசிப் பலருடன் நட்பாடலைத் தெளியாதவர், ஒருவரை ஒருவர் மனவேற்றுமை கொண்டு பிரியுமாறு புறம்பேசி, நெருங்கிய உறவுடையவர்களையும் பிரித்துவிடுவர்.

மணக்குடவர் உரை

நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.

பரிமேலழகர் உரை

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், ‘அயலாரோடும்’ என்பது வருவித்துரைக்கப்பட்டது. ‘அறிதல்’ தமக்கு உறுதி என்று அறிதல். “கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை” (கலி. மருதம்.27) என்புழிப் போலத் ‘தேற்றாமை’ தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.).

English

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

G.U. Pope’s Translation

With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.

மொத்த சொற்கள்: 182

முந்தைய குறள் அடுத்த குறள்

புறங்கூறாமை பிற குறள்கள்

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?