அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வெஃகாமை
குறள்: 178

மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

கலைஞர் உரை

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

சி இலக்குவனார் உரை

செல்வம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதெனின், பிறருடைய பொருளைக் கவர விரும்பாமையேயாகும்.

மணக்குடவர் உரை

செல்வஞ் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை. இது செல்வ மழியாதென்றது.

பரிமேலழகர் உரை

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். (‘அஃகாமை’ ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

English

If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.

G.U. Pope’s Translation

What saves prosperity from swift decline? Absence of lust to make another’s cherished riches thine!

மொத்த சொற்கள்: 133

முந்தைய குறள் அடுத்த குறள்

வெஃகாமை பிற குறள்கள்

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன்

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.