அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வெஃகாமை
குறள்: 175

மு.வரதராசனார் உரை

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

கலைஞர் உரை

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

சாலமன் பாப்பையா உரை

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?

குன்றக்குடி அடிகளார் உரை

மணக்குடவர் உரை

நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை

அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். (‘யார்மாட்டும் வெறிய செய்த’லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் ‘அறிவு என்னாம்’ என்றார்.).

English

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all?

G.U. Pope’s Translation

What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn?

மொத்த சொற்கள்: 163

முந்தைய குறள் அடுத்த குறள்

வெஃகாமை பிற குறள்கள்

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன்

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.