அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அழுக்காறாமை
குறள்: 163

மு.வரதராசனார் உரை

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

கலைஞர் உரை

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

வீ. முனிசாமி உரை

அறத்தினையும் செல்வத்தினையும் வேண்டாம் என்று சொல்லுகின்றவன், மற்றவன் செல்வத்தைக் கண்டபோது தாளாமல் பொறாமைப்படுவான்.

மணக்குடவர் உரை

தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். (‘அழுக்கறுத்தல்’ எனினும் ‘அழுக்காறு’ எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.).

English

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth”.

G.U. Pope’s Translation

Nor wealth nor virtue does that man desire ‘tis plain, Whom others’ wealth delights not, feeling envious pain.

மொத்த சொற்கள்: 157

முந்தைய குறள் அடுத்த குறள்

அழுக்காறாமை பிற குறள்கள்

162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.