ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அழுக்காறாமை
குறள்: 161

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

கலைஞர் உரை

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

வீ. முனிசாமி உரை

ஒருவன் தன்னுடைய மனத்தில் பொறாமை என்னும் குற்றம் இல்லாத தன்மையினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.

மணக்குடவர் உரை

ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை

(இதனுள் ‘அழுக்காறு’ என்பது ஒருசொல்.அதற்குப் பொருள் மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ‘அழுக்காறாமை’ என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின், இதனை விலக்குதற்கு இது பொறை உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.].

English

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

G.U. Pope’s Translation

As ‘strict decorum’s’ laws, that all men bind, Let each regard unenvying grace of mind.

மொத்த சொற்கள்: 181

முந்தைய குறள் அடுத்த குறள்

அழுக்காறாமை பிற குறள்கள்

162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.