உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 160

மு.வரதராசனார் உரை

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

கலைஞர் உரை

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

குன்றக்குடி அடிகளார் உரை

உண்ணாது தவம் செய்யும் பெரியார் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுப்பார்க்குப் பின்னே வைத்து எண்ணப்படுவர்.

மணக்குடவர் உரை

உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின். இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.

பரிமேலழகர் உரை

உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின். (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், ‘இன்னாச் சொல் நோற்பாரின் பின்’ என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.

English

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

G.U. Pope’s Translation

Though ‘great’ we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain.

மொத்த சொற்கள்: 174

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.