துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 159

மு.வரதராசனார் உரை

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

கலைஞர் உரை

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

சாலமன் பாப்பையா உரை

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

இரா சாரங்கபாணி உரை

நெறிகடந்தவர் வாயிலிருந்து வரும் வசைமொழிகளைத் தாங்கிக் கொள்பவர் துறவிகளினும் தூயவராவர்.

மணக்குடவர் உரை

மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

பரிமேலழகர் உரை

துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. ‘வாய்’ என வேண்டாது கூறினார், ‘தீய சொற்கள் பயின்றது’ எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.).

English

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

G.U. Pope’s Translation

They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure.

மொத்த சொற்கள்: 140

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.