ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 155

மு.வரதராசனார் உரை

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

கலைஞர் உரை

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

முனிசாமி உரை

பிறன் தமக்குத் தீமை செய்தால் பொறுமை இழந்து, தண்டித்தவர்களைப் பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்திற் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக்க கொண்டவர்களை எப்போதும் நினைத்து மனத்தில் பொன்போல் கொள்ளுவார்கள்.

மணக்குடவர் உரை

தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

பரிமேலழகர் உரை

ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், ‘ஒன்றாகவையார்’ என்றார். ‘பொதிந்து வைத்தல்’, சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.).

English

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

G.U. Pope’s Translation

Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.

மொத்த சொற்கள்: 176

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.