இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 153

மு.வரதராசனார் உரை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

கலைஞர் உரை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

சாலமன் பாப்பையா உரை

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

நாமக்கல் இராமலிங்கம் உரை

இல்லாமையிலும் இல்லாமை விருந்தினரை உபசரிக்கத் தவிர்வது. வல்லமையிலும் வல்லமை அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுதல்.

மணக்குடவர் உரை

வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை - பொறுமை.

பரிமேலழகர் உரை

இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். (இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)

English

To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

G.U. Pope’s Translation

The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.

மொத்த சொற்கள்: 156

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.