அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பொறையுடைமை
குறள்: 151

மு.வரதராசனார் உரை

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

கலைஞர் உரை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

வ சுப மாணிக்கம் உரை

மணக்குடவர் உரை

தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

English

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

G.U. Pope’s Translation

As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best.

மொத்த சொற்கள்: 162

முந்தைய குறள் அடுத்த குறள்

பொறையுடைமை பிற குறள்கள்

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.