பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பிறனில் விழையாமை
குறள்: 146

மு.வரதராசனார் உரை

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

கலைஞர் உரை

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

தமிழண்ணல் உரை

பிறன் மனையாளிடம் எல்லை கடந்து நடந்து கொள்பவனிடம் பகை, பாவம், அச்சம், பழி நான்கும் அவனை விட்டு நீங்காவாம். அவன்தன் கணவன், சுற்றத்தால் பகை நேரும். தீய செயலாதலின் பாவம் சேரும். செய்யத்தகாததைச் செய்ததால் அச்சத்தால் மனம் தடுமாறும். ஊராரால் பழிக்கப்படுவான்.

மணக்குடவர் உரை

பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

பரிமேலழகர் உரை

இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).

English

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbor’s wife.

G.U. Pope’s Translation

Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four.

மொத்த சொற்கள்: 163

முந்தைய குறள் அடுத்த குறள்

பிறனில் விழையாமை பிற குறள்கள்

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார்

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோன்தோயா தார்

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.