பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: பிறனில் விழையாமை
குறள்: 141

மு.வரதராசனார் உரை

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

கலைஞர் உரை

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

வ சுப மாணிக்கம் உரை

பிறன் மனைவியை விரும்பும் மடமை உலகில் அறம்பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை.

மணக்குடவர் உரை

பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் ‘பரகீயம்’ என்று கூறுவராகலின், ‘அறம் பொருள் கண்டார் கண் இல்’ என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).

English

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

G.U. Pope’s Translation

Who laws of virtue and possession’s rights have known, Indulge no foolish love of her by right another’s own.

மொத்த சொற்கள்: 197

முந்தைய குறள் அடுத்த குறள்

பிறனில் விழையாமை பிற குறள்கள்

142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார்

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோன்தோயா தார்

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.