அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள்: 135

மு.வரதராசனார் உரை

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

கலைஞர் உரை

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

வ சுப மாணிக்கம் உரை

பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ? ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு உண்டோ?

வீ. முனிசாமி உரை

பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.

மணக்குடவர் உரை

மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

பரிமேலழகர் உரை

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.

English

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

G.U. Pope’s Translation

The envious soul in life no rich increase of blessing gains, So man of ‘due decorum’ void no dignity obtains.

மொத்த சொற்கள்: 141

முந்தைய குறள் அடுத்த குறள்

14. ஒழுக்கமுடைமை பிற குறள்கள்

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.