ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள்: 133

மு.வரதராசனார் உரை

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

கலைஞர் உரை

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

சாலமன் பாப்பையா உரை

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

வீ. முனிசாமி உரை

ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் என்பது நற்குடியிற் பிறந்துள்ளவன் என்பதற்கு அடையாளமாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் தாழ்ந்து இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடும்.

மணக்குடவர் உரை

ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

பரிமேலழகர் உரை

ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் ‘குடிமையாம்’ என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).

English

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

G.U. Pope’s Translation

‘Decorum’s’ true nobility on earth; ‘Indecorum’s’ issue is ignoble birth.

மொத்த சொற்கள்: 181

முந்தைய குறள் அடுத்த குறள்

14. ஒழுக்கமுடைமை பிற குறள்கள்

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.