பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள்: 132

மு.வரதராசனார் உரை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

கலைஞர் உரை

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

இளங்குமரன் உரை

காப்பதற்குக் கடினமானது என்றாலும் ஒழுக்கத்தை வருந்திக் காத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வெவ் வழிகளால் ஆராய்ந்தாலும் அவ்வொழுக்கமே நல்ல துணையாகும்.

மணக்குடவர் உரை

வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை

ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இருமைக்கும். துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். (‘பரிந்தும்’ என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

English

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

G.U. Pope’s Translation

Searching, duly watching, learning, ‘decorum’ still we find; Man’s only aid; toiling, guard thou this with watchful mind.

மொத்த சொற்கள்: 178

முந்தைய குறள் அடுத்த குறள்

14. ஒழுக்கமுடைமை பிற குறள்கள்

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.