ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள்: 131

மு.வரதராசனார் உரை

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

கலைஞர் உரை

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

சாலமன் பாப்பையா உரை

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

தமிழண்ணல் உரை

உயிர் சிறந்தது; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது. ஏனெனில் ஒழுக்கமே அவ்வுயிரொடு கூடிய வாழ்க்கைக்கு விழுப்பத்தைத் தருகிறது (விழுப்பம்-நிலைத்த நன்மதிப்பு, சிறப்பு). எனவே ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் கருத்தாகப் பாதுகாக்க வேண்டும். ஒழுக்கச் சிறப்பில்லாத உயிர் மதிக்கப்படாது. ஒழுக்கம் தவறியும் கழுவாய் தேடி வாழலாம் என்பர் சிலர். ஒழுக்கமா, உயிரா என்று வரும்போது ஒழுக்கத்தைக் காக்க உயிரையும் விட்டுவிடலாமென்பதே வள்ளுவர் கருத்து.

மணக்குடவர் உரை

ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். ‘உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார்.).

English

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

G.U. Pope’s Translation

‘Decorum’ gives especial excellence; with greater care ‘Decorum’ should men guard than life, which all men share.

மொத்த சொற்கள்: 204

முந்தைய குறள் அடுத்த குறள்

14. ஒழுக்கமுடைமை பிற குறள்கள்

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.