ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள்: 126

மு.வரதராசனார் உரை

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

கலைஞர் உரை

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

சாரங்கபாணி உரை

ஒரு பிறப்பில் ஒருவன் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு உண்டு.

மணக்குடவர் உரை

ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

பரிமேலழகர் உரை

ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் ‘ஆமை போல்’ என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

English

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

G.U. Pope’s Translation

Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains.

மொத்த சொற்கள்: 208

முந்தைய குறள் அடுத்த குறள்

13. அடக்கமுடைமை பிற குறள்கள்

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை

125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்

பல நல்ல சொற்களையே சொல்லியிருந்தும் அவற்றில் ஒன்றாயினும் தீய சொல்லாய் அதன் தீய பொருட்பயன் உண்டாகுமானால் மற்ற நல்ல சொற்களின் நன்மையும் கெட்டுவிடும்.

129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.