தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள்: 111

மு.வரதராசனார் உரை

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

கலைஞர் உரை

பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

வ சுப மாணிக்கம் உரை

இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.

மணக்குடவர் உரை

நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.)

தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் ‘தகுதி’ என்றார்.“ஊரானோர் தேவகுலம்” என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. ‘பெறின்’ என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

English

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

G.U. Pope’s Translation

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

மொத்த சொற்கள்: 199

முந்தைய குறள் அடுத்த குறள்

12. நடுவு நிலைமை பிற குறள்கள்

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.