எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 11. செய்ந்நன்றி அறிதல்
குறள்: 110

மு.வரதராசனார் உரை

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

கலைஞர் உரை

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சாலமன் பாப்பையா உரை

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

தமிழண்ணல் உரை

உலகில் எந்த நன்மையைச் சிதைத்தவர்க்கும் அதிலிருந்து உய்யும் வழியுண்டு. ஆனால் பிறர் செய்த நன்றியைக் கொன்றவர்க்கு உய்யும் வழியே கிடையாது. செய்ந்நன்றி கொல்லுதல்,செய்த நன்மைக்குப் பதிலாகத் தீங்கு செய்தல். நன்றி மறந்தவர் என்னாது, கொன்றவர் என்ற சொல்லாட்சி கருதத்தக்கது. உலகியலில் நன்றி கொன்றவர் எனுமாறு நடந்து கொள்பவரே பலராவர்.

மணக்குடவர் உரை

எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

பரிமேலழகர் உரை

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

English

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

G.U. Pope’s Translation

Who every good have killed, may yet destruction flee; Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!

மொத்த சொற்கள்: 190

முந்தைய குறள் அடுத்த குறள்

11. செய்ந்நன்றி அறிதல் பிற குறள்கள்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

105. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.