பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 11. செய்ந்நன்றி அறிதல்
குறள்: 103

மு.வரதராசனார் உரை

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

கலைஞர் உரை

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

சாலமன் பாப்பையா உரை

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

இரா சாரங்கபாணி உரை

இன்னது செய்தால் இது கிடைக்கும் எனப் பயனை எண்ணிப் பாராமல் உதவியவரின் அன்பை ஆராய்ந்து பார்த்தால் அவர் செய்த உதவியின் நன்மை கடலைவிடப் பெரிதாம்

மணக்குடவர் உரை

தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

பரிமேலழகர் உரை

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)

English

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

G.U. Pope’s Translation

Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, ‘Tis vaster than the sea.

மொத்த சொற்கள்: 181

முந்தைய குறள் அடுத்த குறள்

11. செய்ந்நன்றி அறிதல் பிற குறள்கள்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

105. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.