இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 10. இனியவைகூறல்
குறள்: 99

மு.வரதராசனார் உரை

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

கலைஞர் உரை

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

சாலமன் பாப்பையா உரை

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

குன்றக்குடி அடிகளார் உரை

பிறர் கூறிய இன்சொல்லால் இன்பம் நுகர்ந்ததை அறிந்தவன், பிறரிடத்தில் வன்சொல்லை வழங்குவது ஏன்?

மணக்குடவர் உரை

இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? (‘இனிது’ என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

English

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.

G.U. Pope’s Translation

Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words?

மொத்த சொற்கள்: 158

முந்தைய குறள் அடுத்த குறள்

10. இனியவைகூறல் பிற குறள்கள்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

100. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.