சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 10. இனியவைகூறல்
குறள்: 98

மு.வரதராசனார் உரை

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

கலைஞர் உரை

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

சி இலக்குவனார் உரை

இழிவற்ற இனியசொல் மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பம் கொடுக்கும்.

மணக்குடவர் உரை

புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)

English

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

G.U. Pope’s Translation

Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.

மொத்த சொற்கள்: 143

முந்தைய குறள் அடுத்த குறள்

10. இனியவைகூறல் பிற குறள்கள்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

100. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.