இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 10. இனியவைகூறல்
குறள்: 100

மு.வரதராசனார் உரை

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

கலைஞர் உரை

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

சாலமன் பாப்பையா உரை

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

இரா சாரங்கபாணி உரை

இன்பத்தைத் தரும் இனிய சொற்கள் தன்னிடம் இருக்க, அவற்றைக் கூறாது ஒருவன் துன்பம் தரும் கடுஞ்சொற்களைக் கூறுதல், கனியும் காயும் ஓரிடத்தே இருக்கக் கனியை விடுத்துக் காயை விரும்பியது போலும்

மணக்குடவர் உரை

பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

பரிமேலழகர் உரை

இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். (‘கூறல்’ என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)

English

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

G.U. Pope’s Translation

When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

மொத்த சொற்கள்: 214

முந்தைய குறள் அடுத்த குறள்

10. இனியவைகூறல் பிற குறள்கள்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.