கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து
குறள்: 9

மு.வரதராசனார் உரை

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

கலைஞர் உரை

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

நாமக்கல் கவிஞர் உரை

எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராத கண், கேளாத செவி போலப் பயனற்றது.

மணக்குடவர் உரை

அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

பரிமேலழகர் உரை

கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா’ வை முதலாக உடையன எனவும், ‘கடை இலா அறிவை’ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).

English

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

G.U. Pope’s Translation

Before His foot, ‘the Eight-fold Excellence,’ with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.

மொத்த சொற்கள்: 241

முந்தைய குறள் அடுத்த குறள்

1. கடவுள் வாழ்த்து பிற குறள்கள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

10. பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.