அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து
குறள்: 8

மு.வரதராசனார் உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

கலைஞர் உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா உரை

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

நாமக்கல் கவிஞர் உரை

அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது.

மணக்குடவர் உரை

அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், ‘அறஆழி’ அந்தணன் என்றார். ‘அறஆழி’ என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, ‘அதனை உடைய அந்தணன்’ என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், ‘நீந்தல் அரிது’ என்றார். இஃது ஏகதேச உருவகம்.).

English

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

G.U. Pope’s Translation

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain, ‘Tis hard

the further bank of being’s changeful sea to attain.

மொத்த சொற்கள்: 207

முந்தைய குறள் அடுத்த குறள்

1. கடவுள் வாழ்த்து பிற குறள்கள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

10. பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.