வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து
குறள்: 4

மு.வரதராசனார் உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

நாமக்கல் கவிஞர் உரை

விருப்பு வெறுப்பின்றி நடுநிலையிலிருப்பவனின் திருவடியை இடையின்றி நினைப்பவர்க்கு எப்பொழுதும் துன்பங்கள் இல்லை.

மணக்குடவர் உரை

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்று பெயரிட்டார்.

பரிமேலழகர் உரை

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

English

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

G.U. Pope’s Translation

His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain

Shall not, through every time, of any woes complain

மொத்த சொற்கள்: 163

முந்தைய குறள் அடுத்த குறள்

1. கடவுள் வாழ்த்து பிற குறள்கள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

10. பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.