10 Easy Thirukkural to Learn Today
We've compiled a list of 10 easy thirukkural to memorize in tamil with their meaning.
கவிச்சுவையும், அறக்கருத்துகளையம் கொண்ட ஈரடி வெண்பா நூலான திருக்குறள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய ஒரு சிறந்த நூலாகும். ஆதலால் தான் திருக்குறள், தமிழ் மறை என்றும் தெய்வ நூல் என்றும் பொது மறை என்றும் அறிஞர்களால் அழைக்கப்பட்டது. மேலும் பல வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட ஒரே தமிழ் நூலும் அதுவே. திருக்குறளை நன்கு கற்று தேர்ந்தவர்கள் மிகச் சிலரே. உங்களுடைய திருக்குறள் பயிலும் பயணத்தை இந்த பத்து எளிய குறள்களுடன் இன்றே இனிதே ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்!
குறள் 1
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 1, பால்: அறத்துப்பால்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
பதவுரை: அகர - ‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல - முதலாகயுடையன; எழுத்து - எழுதப்படுவது; எல்லாம் - அனைத்தும்; ஆதி - முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன் - கடவுள்; முதற்றே - முதலேயுடையது; உலகு - உலகம்.
குறள் 2
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 10, பால்: அறத்துப்பால்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பதவுரை: பிறவி - பிறப்பு, இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது; பெரும் - பெரியதாகிய; கடல் - கடல்; நீந்துவர் - நீந்துவார்கள்; நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; இறைவன் அடி சேராதார் - கடவுள் தாள் சென்றடையாதார், இங்கு கடவுளை இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.
குறள் 3
அதிகாரம்: 2. வான் சிறப்பு, குறள் எண்: 20, பால்: அறத்துப்பால்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
பதவுரை: நீர் - நீர்; இன்று - இன்றி, இல்லாமல்; அமையாது - நிலைபெறாது, முடியாது; உலகு - உலகம்; எனின் - என்றால்; யார்யார்க்கும் - எவருக்குமே, எவ்வகைப்பட்டவர்க்கும்; வான் - வானம், மழை; இன்று - இல்லாமல்; அமையாது - இருக்காது; ஒழுக்கு - ஒழுக்கம்.
குறள் 4
அதிகாரம்: 5. இல்வாழ்க்கை, குறள் எண்: 45, பால்: அறத்துப்பால்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
பொருள்: இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
பதவுரை: அன்பும் - அன்பும்; அறனும் - நல்வினையும்; உடைத்தாயின் - உடையதானால்; இல்வாழ்க்கை - இல்லாளோடு கூடிய வாழ்க்கை; பண்பும் - குணமும்; பயனும் - பயனும்; அது - அது.
குறள் 5
அதிகாரம்: 5. இல்வாழ்க்கை, குறள் எண்: 50, பால்: அறத்துப்பால்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
பொருள்: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
பதவுரை: வையத்துள் - நிலவுலகத்துள்; வாழ்வாங்கு - வாழும் முறைப்படி; வாழ்பவன் - வாழ்க்கை நடத்துபவன்; வான் - விண்ணுலகம்; உறையும் - தங்கும்; தெய்வத்துள் - தெய்வத் தன்மையில்; வைக்கப்படும் - மதிக்கப்படும்.
குறள் 6
அதிகாரம்: 7. மக்கட்பேறு, குறள் எண்: 66, பால்: அறத்துப்பால்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
பொருள்: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
பதவுரை: குழல் - புல்லாங்குழல்; இனிது - இனிமையானது; யாழ் - யாழ் என்னும் இசைக்கருவி; இனிது - இனிமையானது என்ப - என்று சொல்லுவர். தம் - தமது; மக்கள் - புதல்வர்; மழலை - குதலை; சொல் - மொழி; கேளாதவர் - கேட்காதவர்.
குறள் 7
அதிகாரம்: 8. அன்புடைமை, குறள் எண்: 71, பால்: அறத்துப்பால்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
பொருள்: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
பதவுரை: அன்பிற்கும் - உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ - உளதோ; அடைக்கும் - அடைத்து வைக்கும்; தாழ் - தாழ்ப்பாள்; ஆர்வலர் - முதிர்ந்த அன்புடையவர்; புன் - துன்பம்; கணீர் - கண்+நீர், கண்(ணில் பெருகும்) நீர்; பூசல் - ஆரவாரம்; தரும் - கொடுக்கும்
குறள் 8
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல், குறள் எண்: 108, பால்: அறத்துப்பால்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
பொருள்: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
பதவுரை: நன்றி - உதவி; மறப்பது - மறத்தல்; நன்று - நன்மை; அன்று - இல்லை நன்று - நன்மை; அல்லதுஅல்லாதது; அன்றே -அக்கணமே; மறப்பது - மறத்தல்; நன்று - நன்மை.
குறள் 9
அதிகாரம்: 13. அடக்கமுடைமை, குறள் எண்: 129, பால்: அறத்துப்பால்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
பொருள்: தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
பதவுரை: தீயினால் - நெருப்பால்; சுட்ட - சுட்ட (முதல் அடியில் உள்ள ‘சுட்ட’ நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண் - வடு; உள்-உள்ளுக்குள். ஆறும் - தீரும்; ஆறாதே - ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால் - நாக்கினால்; சுட்ட - எரித்த (ஈற்றடியில் உள்ள ‘சுட்ட’ வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு - தழும்பு.
குறள் 10
அதிகாரம்: 16. பொறையுடைமை, குறள் எண்: 151, பால்: அறத்துப்பால்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள்: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
பதவுரை: அகழ்வாரை - தோண்டுவாரை; தாங்கும் - சுமக்கும்; நிலம் - நிலம்; போல - ஒக்க; தம்மை - தம்மை; இகழ்வார் - இகழ்பவர்கள்; பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுதல்; தலை - முதன்மை, சிறப்பு.